உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது: மன்மோகன் சிங்

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ‛‛இந்தியா தன் இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதில் சரியானதைச் செய்துள்ளது. அதேநேரம் சர்வதேச அமைதிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஓராண்டிற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்ததுடன், உக்ரைனுக்கு ஆதரவும், உதவியும் செய்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா இன்னும் பின்வாங்கவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலைமை வகித்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கூறியதாவது:-

உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது. இரண்டு உலக நாடுகள் மோதும்போது மற்ற நாடுகள் யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நமது இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது. அந்த நேரத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் செய்துள்ளனர்.

ஜி20 சர்வதேச மோதல்களைத் தீர்க்காது. கடந்த காலங்களிலும் மோதல்களைத் தீர்ப்பதற்கான மன்றமாக ஜி20 இருந்தது இல்லை. எனவே, அதை ஒதுக்கி வைத்துவிட்டு, காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் உலகளாவிய வர்த்தகம் ஆகிய சவால்களை சமாளிக்க கொள்கையை நாம் உருவாக்க வேண்டும்.

ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. ஜி20 மாநாட்டிற்கு உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வருவதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருந்தது. வெளியுறவுக் கொள்கை எப்போதுமே இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நான் பிரதமராக இருந்த காலத்தை விட இப்போது உள்நாட்டு அரசியலுக்கு வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானதாக மாறி உள்ளது. இருப்பினும் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தை கட்சி அரசியலுக்கு பயன்படுத்துவதில் நிதானமாகவே இருக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.