அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்றனர். இந்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிலையில், இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தலைவர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராஷ்டிரபதி பவனில் நடந்த ஜி20 விருந்தில் காவேரி டேபிளில் கலந்து கொண்டேன் எனப் பதிவிட்டு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை டேக் செய்துள்ளார். மேலும் ஜோ பைடன் உடன் கைகுலுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.