டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ள அம்மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் மாநில அரசு கடந்த 11-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இதனை அறிவித்தார். டெல்லி அரசின் இந்த முடிவை எதிர்த்து பாஜக எம்பி மனோஜ் திவாரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு முறையிட்டார். மனோஜ் திவாரி சார்பாக அவரது வழக்கறிஞர், நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, பசுமை பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு மாறாக, டெல்லி அரசு ஒட்டுமொத்த தடையை விதித்திருப்பதாக புகார் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “டெல்லி அரசு எடுத்துள்ள முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம். பட்டாசுக்கு தடை என்றால், அது முழுமையான தடைதான். மக்களின் உடல்நிலை மிகவும் முக்கியம். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எங்கே தடை இல்லையோ அங்கே சென்று வெடிக்கலாம்” என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட மனோஜ் திவாரி வழக்கறிஞர், “எனது கட்சிக்காரர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். தனது தொகுதி மீது அவருக்கு பொறுப்பு உள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. எனவே, அந்த அனுமதியை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “டெல்லியில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதை மக்களுக்கு நீங்கள் புரியவையுங்கள். தீபாவளிக்கு மட்டுமல்ல, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின்போதும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. வெற்றியைக் கொண்டாட வேறு பல வழிகள் உள்ளன” எனத் தெரிவித்தனர்.
பட்டாசு வாங்க, விற்க, சேமிக்க தடை விதித்துள்ள டெல்லி அரசு, ஆன்லைனில் பட்டாசுகளை வாங்கவும் தடை விதித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2 ஆண்டுகளாக இதேபோன்ற தடையை டெல்லி அரசு விதித்தது. எனினும், தீபாவளி நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையால் வடமாநில ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.