தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது செப்டம்பர் 12ஆம் தேதி வரை நாள் தோறும் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனல இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உரிய நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவசர அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து இருந்தார். ஆனால் இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்களான எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அரசியல் பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் டுவீட் செய்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க நேற்றிரவு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், எனது தொகுதியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், அரசு அழைத்த கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. காவிரி விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு தமிழக அரசு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கூறி இருந்தார்.

குமாரசாமியும், ஹாசனில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதால், கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை அல்லது உத்தரவு குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதை மாநில அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை நியாயமற்றது என்று குறிப்பிட்ட அவர், காவிரிப் படுகையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், பயிர்களை பயிரிட வேண்டாம் என்று விவசாயிகளை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டது; வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவிடம் மனுத்தாக்கல் செய்யவும் முடிவு செய்யபப்ட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கூட்டம் முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது:-

மழை இல்லாததால் கர்நாடகம் தீவிர தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடமும் மனு அளிக்கவிருக்கிறோம். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசுவார்கள். பிரதமர் மோடிக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிடுவோம். கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைப் போக்கவே 70 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.