கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாதாமாதம் அவர்களது வங்கிக் கணக்கிலேயே இத்தொகை செலுத்தப்படும் என்பதால், பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் பணி கடந்த செப்.12-ம் தேதி முதல் நடந்தது. இதற்காக அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பப்பட்டது. அவர்களை அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்குக்கு பணம் வந்தடைந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டது. அதில் மகளிர் உரிமைத் தொகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி. எந்தெந்த சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். ஏடிஎம் பின் முதலியனவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் அதில் திட்டத்தின் இரண்டு நோக்கங்கள் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமை திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்தது ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது, முன்னதாக காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

திட்டம் தொடங்கப்படும் நாளான இன்று அனைத்து வங்கிக் கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே ரூ.1,000 உரிமை தொகை விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

இத்திட்டத்தை தொடங்கி வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறாக கருதுகிறேன். தாய் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. இனி, இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீட்டிக்கும் காலம் எல்லாம் நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் நான் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மகளிர் உரிமைத் தொகையைப் பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்.

இந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை பயனுள்ள திட்டங்கள், விடியல் பயணத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கியபோது எப்படிப்பட்ட மகிழ்ச்சையை அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்.

இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப்போகிறது. நாள் தோறும் உதிக்கும் உதயசூரியன் உங்களுக்கு புத்துணர்ச்சியைப் போல, இந்த ஆயிரம் ரூபாய் உங்களுக்கு பயன்படப் போகிறது. இது திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வாக்குறுதி. ரொம்ப முக்கியமான வாக்குறுதி. இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். இவர்களால் தரமுடியாது என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழும் சிலர் கூறினார்கள். ஆட்சிக்கு வந்ததுமே கொடுத்திருப்போம். ஆனால், நிதி நிலைமை சரியாக இல்லை. அதனால்தான், நிதி நிலையை ஓரளவுக்கு சரிசெய்துவிட்டு, இப்போது கொடுக்கிறோம். இதையும் சிலரால் தாங்க முடியவில்லை. பொய்களையும், வதந்திகளையும் பரப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று தமிழக மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். சொன்னதை செய்வான் கருணாநிதியின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி.

இந்த விழா காஞ்சிபுரம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு வருகிறது. என்னைப் போலவே, அமைச்சர்களுகும் பல்வேறு மாவட்டங்களில் சென்று விழாவில் கலந்துகொண்டுள்ளனர். நான் போட்ட ஒரு கையெழுத்து பலரது வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்ற உரிமையை எனக்கு கொடுத்தவர்களே மக்கள்தான்.

தமிழக மக்களாகிய நீங்கள், உதய சூரியன் சின்னத்தையும், எங்களது கூட்டணி கட்சியினரையும் ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வாக்களித்ததால்தான், முதல்வர் பொறுப்பில் அமர்ந்து, உங்களுக்குத் தேவையானதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். மக்களுக்காகத்தான் பயன்படுத்துவேன்.

நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல், வாழ்நாள் உழைக்கக்கூடிய பெண்களின் உழைப்புக்கு கொடுக்கக்கூடிய அங்கீகாரம். இந்தாண்டுக்கு 12000 ரூபாய், உரிமைத் தொகை கிடைக்கப்போகிறது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, சுயமரியாதையுடன் சமூகத்தில் பெண்கள் வாழ உதவியாக இருக்கும். இவை இரண்டும் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.