ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தவிட்ட நீதிபதி அல்லி மனு மீதான விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இன்று விசாரணையின்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதங்களை அடுக்கினார். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதம் வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார். அன்று, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.