இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு: மதுரை மதிமுக மாநாட்டில் தீர்மானம்!

உலகத் தமிழினம் இணைந்து இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று மதுரை மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, மதுரையில் மதிமுக மாநாடு இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசியதாவது:-

30 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை மாநாடாக கொண்டாடும் ஒரே இயக்கம் மதிமுக. மதம் சமத்துவத்தை பரப்ப வேண்டும். அடிமைத்தனத்தை அல்ல. வள்ளலார், அம்பேத்கர் என பல பெரியோர்களும் இதைத்தான் சொல்கின்றனர். நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற ஏற்றத் தாழ்வை உருவாக்கியது சனாதனம். சுய மரியாதையை குழிதோண்டி புதைத்தது. சனாதனத்தால் திறமை, விருப்பத்தால் கல்வி, வேலையை தீர்மானிக்க முடியாது. சாதிதான் இதை தீர்மானிக்கும். குழந்தை திருமணத்தை வலியுறுத்துகிறது சனாதனம். உடன்கட்டை ஏறச் சொல்கிறது. பெண்கள் மிகவும் இழிவாக நடத்தப்பட்டனர். மேலாடை அணியக் கூடாது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தகர்க்கத்தான் 100 ஆண்டுகளாக திராவிட அரசியல் செயலாற்றுகிறது.

முகலாயர்கள், கிறிஸ்தவ மிஷினரிகளால் அழி்க்க முடியாத சனாதனத்தை திராவிடத்தால் அழிக்க முடியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்கிறார். இவர்களால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியுள்ளது. சனாதன தர்மத்தின் முதுகெலும்பை 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பெரியார் போன்றவர்களால் முறித்துவிட்டனர். சனாதனத்தை ஆதரிக்கும் இயக்கம் இருக்கும்வரை சாதிய கொடுமை இருக்கத்தான் போகிறது. மனிதநேயத்துக்கு எதிரான சனாதன தர்மத்தை முழுமையாக அகற்றுவது அனைவரின் கடமை.

மதிமுகவை உயர்ந்த இடத்துக்கு இட்டுச்செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளது. 20 வயதில் பொதுவாழ்வு பயணத்தை துவங்கிய வைகோவின் பயணம் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்கிறது. அவரது உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை. இறுதி மூச்சுவரை அவரது உயிர் இயக்கத்துக்காக துடித்துக்கொண்டே இருக்கும். அரசியலில் அவர் விரும்பிய இலக்கை அடையாமல் இருக்கலாம். ஆனால், லட்சணக்கான தொணடர்களின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றுள்ளார். இதற்கு ஈடு, இணை ஏதுமில்லை. மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வைகோ இன்று நிம்மதியாக உறங்கச் செல்வார். இதற்கு முக்கிய காரணமாக இருந்த எம்எல்ஏ பூமிநாதன் உள்ளிட்டோருக்கு நன்றி.

3 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவின் எதிர்காலம், தொண்டர்கள் நலன் கருதி சுமையை பகிர்ந்துகொள்ள அரசியலுக்கு வந்தவன் நான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தொண்டர்களான உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். மதிமுக வெற்றியில் எளியவனான எனது பங்கும் உண்டு. அனைவரும் பாராட்டும் வகையில் வைகோவின் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்தேன். உலக தலைவர்கள் பலரும் பாராட்டினர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகோவுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. பொய்யான செய்திகளை பரப்பி உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை தகர்க்க உதவியுள்ளேன். தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு எனக்கு கிடையாது.

வைகோ இந்த நாட்டுக்காக எவ்வளவோ செய்துள்ளார். நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. அப்படி இருக்கும்போது எனக்குப் பதவி ஆசை எப்படி வரும். ஏற்கெனவே வந்த வாய்ப்பை மறுத்தவன் நான். வைகோ எம்பி பதவிக்கு போட்டியிடாமல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற தொண்டரை வெற்றி பெறச் வைத்தார். பலமுறை மத்திய அமைச்சர் வாய்ப்பை மறுத்தார். பிரதமராக இருந்த வாஜ்பாய் வைகோவை அமைச்சராக்க வற்புறுத்தியும் மறுத்தேவிட்டார். வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளிடம் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றேன். மதிமுக தொண்டன் என்ற ஒன்றே போதும். முதன்மை செயலாளர் பதவி பெரிதல்ல.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் விருதுநகரில், திருச்சியில், பெரம்பலூரில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் இயக்க தோழர்களிடம் நடைபெற்று வருகிறது. நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். தலைமைக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. தலைமைக்கும், கட்சி தோழர்களுக்கும் பக்கபலமாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்து போட்டியிட வைக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு மதிமுக புதிய உத்வேகத்துடனும், புதுப்பொலிவுடனும் செயல்படுகிறது என்ற செய்தியை நான் கேட்க வேண்டும். இவ்வாறு துரை வைகோ பேசினார்.

மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் விபரம்:

* பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும்.

* இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்ற சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதால் மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும். மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும்.

* நூலகச் சட்டம் என்ற பெயரில் நூலகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்.

* விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

* தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறியும், மாநில அரசின் அதிகாரத்தை பறித்தும் எதேச்சாதிகாரமாக துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம்.

* மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* மதுரை மாநகருக்கு அம்ரூத் 3 திட்டத்தின் கீழ் ரூ.1,685.76 கோடியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

* வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிப்பை தவிர்க்க, வங்க தேச ஆடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுக்கு தமிழகம் அழுத்தம் தர வேண்டும்.

* குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை செய்ய வேண்டும்.

* உலகத் தமிழினம் இணைந்து இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும்.

* எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

* நியாய விலைக் கடைகளில் கொடுக்கும் பாமாயில் எண்ணெயை ரத்து செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.