திமுக அரசால் சீமானை கைது செய்ய முடியுமா என எனக்குத் தெரியவில்லை: விஜயலட்சுமி!

திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு என்று சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு புகார்களை அளித்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், சீமான் தன்னை காதலித்தாக தெரிவித்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தாகவும் இருப்பினும் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் திருமணம் செய்வதாகக் கூறிவிட்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது மட்டுமின்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே தானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். இது மட்டுமின்றி அரசியலில் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்று கூறி சீமான், தனது கருவையும் கலைத்ததாகவும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நான் ஏழு முறை கருவுற்றேன்.. இருப்பினும், எனது அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனால் எனது உடலும் உள்ளமும் பலவீனம் ஆனது” என்று அவர் தெரிவித்தார். மேலும், சினிமாவில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த 60,00,000/- லட்சம் பணத்தையும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சீமான் பெற்றுக் கொண்டதாகப் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து அவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார்.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீமான் மீதான புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை இரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர், சீமான் மீதான அனைத்து புகார்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

போலீசாரின் உரியப் பாதுகாப்புடன் தான் இருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். இருப்பினும், கடந்த சில நாட்களாக வீரலட்சுமி ஒரு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ஒரு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார். எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுவிட்டுப் பேசும்படி கூறியிருந்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து நேற்றிரவே என்னை அங்கிருந்து வெளியே செல்லும்படி சொன்னார்கள். இரவு நேரம் என்பதால் போலீஸ் தான் அங்கே பேசி தங்க வைத்தனர். அங்கே எனக்குக் காலையில் உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ் தான் வாங்கிக் கொடுத்தார்கள். இப்படி வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்களை நான் எதிர்கொண்டேன். இதன் காரணமாகவே நான் புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன். நான் இப்போது பெங்களூர் கிளம்புகிறேன்.

யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. சீமானிடமும் கூட இது குறித்துப் பேசினேன். புகார் அளித்த என்னையே கொச்சைப்படுத்தினார்கள். இது எனக்கே டார்ச்சாக இருந்தது. இதை மேலும் தொடர எந்தவொரு எண்ணமும் இல்லை. போலீஸ் நடவடிக்கை சற்று மெதுவாக இருந்தது. எனக்கு 20 சம்மன் அனுப்பினாலும் எதுவும் செய்ய முடியாது எனச் சீமான் கூறிய பிறகும், சம்மன் அனுப்பி வந்தனர். இதில் பல கொடுமைகளை எதிர்கொண்டேன். வீரலட்சுமி சொன்னதும் என்னை அதிகம் கொடுமைப்படுத்தினார்கள். சீமான் பேசுவதும் எனக்கு நிறையக் கஷ்டமாக இருக்கிறது. என்னால் இவ்வளவு தான் முடிந்தது. இந்த விவகாரத்தில் என்னால் இனியும் முடியாது.. இன்றைக்குச் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் போனது. இரண்டு வாரம் வீட்டுச் சிறை போலவே இருந்தேன்.. மொபைல் கூட இல்லாமல் தான் இருந்தேன். வரும் காலத்தில் இதைத் தொடர விரும்பவில்லை.

நாங்கள் இந்த விவகாரத்தில் முழு முயற்சி எடுத்தோம். இருப்பினும், உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை நடந்த விதத்தில் இதில் திருப்தி இல்லை. தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிக பவர் இருக்கிறது போல.. அவரை தாண்டி எதுவும் செய்ய முடியாது போல.. நான் எனது தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். இப்போது சீமான் தான் இங்கே பவர்புல்லாக இருக்கிறார் போல.. எதிரி என்றால் தான் மனவேதனையாக இருந்திருக்கும். நான் வாழ்ந்த நபர் தானே.. பல விஷயங்கள் சொன்னார். இதற்கு மேல் என்னால் சண்டை போட முடியாது. சீமான் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவர் வெற்றிகரமாக இருக்கட்டும். இதுவே போதும். எதுவும் செய்ய முடியாது: சீமானுடன் நான் பேசினேன்.. எல்லாம் விஜயலட்சுமியை வைத்துப் பயன்படுத்தவே பார்க்கிறார்கள். யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை.. நான் மட்டும் தனியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அவரை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது போல.. நான் இதை மேலும் மோசமாக்காமல் விலகிக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் நான் பணம் எதையும் வாங்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நாங்கள் இந்த விவகாரத்தைப் பேசி சரி செய்து கொண்டோம். எனக்கு போதிய ஒத்துழைப்பு இல்லாததே காரணம். சமூக வலைத்தளங்களில் என்னை ரொம்பவே அசிங்கப்படுத்தினார்கள். இதனால் போதும் என்ற முடிவுக்கு வந்து கொண்டேன். சாதாரண நபருக்கு எதிரான வழக்கு என்றால் நடவடிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு எதிராக என்பதால் எதையும் செய்ய முடியவில்லை. மீண்டும் இந்த விவகாரத்தைத் தொடர வேண்டாம் என்பதாலேயே பேசி சமரசமாக முடித்துக் கொண்டோம். இங்கே நியாயம் யார் பக்கம் இருந்தது என்பதில் விஷயம் இருக்கவில்லை. யாரிடம் பவர் இருந்தது என்பதே இதை முடிவு செய்தது. திமுக அரசால் சீமானை கைது செய்ய முடியுமா என எனக்குத் தெரியவில்லை. அவரை விசாரணைக்குக் கூடக் கொண்டு வர முடியில்லை. இதனால் இனியும் போராடுவதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.