அமைச்சர் செந்தில் பாலாஜி சேராத ஒரே கட்சி பாஜகதான்: அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜி சேராத ஒரே கட்சி பாஜகதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் , என் மக்கள் என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் பாஜக அரசின் சாதனை விளக்க கூட்டத்தையும் நடத்தி வருகிறார். எங்கு சென்றாலும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அந்த வகையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயணம் சென்றார் அண்ணாமலை. அவருக்கு சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பு இருந்தது. அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திமுகவினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். திமுக இருக்கும் வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியவே அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குத்தான் செல்ல வேண்டுமே தவிர டாஸ்மாக்கிற்கு செல்லக் கூடாது. திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் நேற்று முன் தினமே பலருக்கு செல்போனில் பணம் வரவு வைத்துவிட்டதாக எஸ்எம்எஸ் வந்துவிட்டது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது 14 ஆம் தேதி நிறைந்த அமாவாசை என்பதால் நல்ல திட்டத்தை அன்றே தொடங்கிவிட்டதாக தெரிவித்தனர். சனாதனத்தை எதிர்க்கும் திமுக அமாவாசை நாளில் திட்டத்தை தொடங்க நாள் நட்சத்திரம் பார்க்கலாமா.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்த போதிலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். அமலாக்கத் துறை சோதனை பெரும்பாலான அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத திமுக அமைச்சர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கும் அமலாக்கத் துறை ரெய்டு வரும். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க மனு தாக்கல் செய்தபோது அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது சார்பில் வாதாடிய என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜியை பாஜகவில் சேருமாறு அமலாக்கத் துறை கட்டாயப்படுத்துகிறது என்கிறார். இவருக்கு ஜாமீன் வேண்டுமென்றால் செந்தில் பாலாஜி எந்த தவறையும் செய்யவில்லை என கூறிதான் ஜாமீன் கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பாஜகவில் சேருமாறு அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தினார்கள் என சொல்வது என்ன நியாயம்? செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பாஜக மட்டும்தான். எத்தனைதான் பொய் சொல்வீர்கள். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலைக்கு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஒரு ஊழல்வாதி, அவரை கைது செய்ய வேண்டும் என்றார். அதைத்தான் 7 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத் துறை செய்துள்ளது. இதற்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம், உப்புத் திண்றவன் தண்ணீரை குடித்தே ஆக வேண்டும். இப்போதான் உதயநிதியே அரசியலுக்கு வந்திருக்காரு. அதுக்குள்ள அவரு மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி பாலாபிஷேகம் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.