19ஆம் தேதி முதல் கேஷ் ஆன் டெலிவரியின்போது 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: அமேசான்

இ-வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், செப்டம்பர் 19ஆம் தேதி முதல், பொருள்களுக்கு கேஷ் ஆன் டெலிவரியின்போது 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கடந்த மே 19ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கையிலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் வைப்பாக செலுத்தவோ அல்லது சில்லறையாக மாற்றவோ முடியும் என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அமேசான் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளது.

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இதனை முன்னிட்டே அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்த நிலையில், அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது. மக்களின் வசதிக்காக, ஒரு சில இடங்களில் இன்னமும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. இதற்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. 87 சதவீத நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், 13 சதவீத நோட்டுகள் சில்லறையாக மாற்றிக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாக 2,000 ரூபாய் நோட்டு, மெல்ல புதிய நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு, புழக்கத்தில் இருந்து குறைந்து, செப்டம்பர் மாதத்தோடு இல்லாமலே போகப்போகிறது.