கொடநாடு வழக்கில் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மனு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதோடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் கார் ஓட்டுநரான கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்த நிலையில் தொடர்ந்து பல திடுக்கிட வைக்கும் சம்பவங்கள் நடந்து வந்தன. கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அந்த வழக்கில் 11வது குற்றவாளியாக இருக்கிறார். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு கொடநாடு வழக்கு குறித்து அவர் பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், ‛‛எனது சகோதரர் கனகராஜ் என்னை சந்தித்தபோது 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க வேண்டும்” என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தனபாலின் சகோதரருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதோடு கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி மஞ்சுளா முன், 19ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனபாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் ஆகிய இருவருக்கு எதிராகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தவர் கனகராஜின் அண்ணன் தனபால். நேற்று முன் தினம் கூட இந்த வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தனபால் விசாரணைக்கு ஆஜராகினார். இந்த சூழலில் இன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சேலம் அரசு மருத்துவமனையில் தனபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.