கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து எஸ்பி ராஜாராம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்று பகுதியில் புதுச்சேரி கும்தாமேடு பகுதியைச் சேர்ந்த 12 வயது கொண்ட சிறுவர்கள் இருவர் நேற்று (செப்.16)மாலை கையால் துழவி இறால் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் 100-க்கும் மேல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் ரெட்டிச்சாவடி போலீஸார் சிறுவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்த 160 க்கும் மேற்பட்ட பெரிய துப்பாக்கி மற்றும் கை துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்துபவை. இதனை தொடர்ந்து அவர்களிடம் கடலூர் எஸ்பி ராஜாராம் விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெண்ணையாற்றில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவர்களிடம் துப்பாக்கி கிடைத்தது. இதனை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீஸார் பயன்படுத்தும் 160-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்திருப்பது கடலூர் புதுச்சேரி போலீஸாரிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி குண்டுகள் கடலூர் மாவட்ட போலீஸார் அல்லது புதுச்சேரி மாநில போலீஸார் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டுகளும் உள்ளதால் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.