சனாதனத்தில் வன்முறைக்கு இடமில்லை. ராமருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் அதை பார்த்து வளர்ந்தவள் நான் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். சனாதனம் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். அப்படி இருக்கும்போது, என்னதான் கொள்கை இருந்தாலும், ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை.
ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு ஒழிக்கப்போகிறேன் என்று சொன்னால், அது மிக தவறு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது பொருந்தாது. சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு இது இல்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார். அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கிறார். அமைச்சராக இருப்பவர் பொறுப்போடு பேச வேண்டும்.
சனாதனத்தில் வன்முறைக்கு இடமில்லை. ராமருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் அதை பார்த்து வளர்ந்தவள் நான். ஆனால் அவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்தியும் வன்முறையை வெளிப்படுத்தாத மதம் தான் இந்து மதம். அதேநேரம் இவர்கள் இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.