சீதையாக நடித்த நயன்தாரா தற்போது பார்வதியாக நடிக்கவிருக்கிறார்!

பான் இந்திய படத்தில் சிவனாக பிரபாஸும், பார்வதியாக நயன்தாராவும் நடிக்கவிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்திருந்தார் நயன்தாரா. முன்னதாக ஸ்ரீ ராம ராஜ்யம் தெலுங்கு படத்தில் சீதாவாக நடித்தார். இந்நிலையில் பார்வதியாக நடிக்கிறார் நயன்தாரா. பிரபாஸ் நடிக்கும் கண்ணப்பர் எனும் படத்தில் தான் பார்வதியாக நடிக்கப் போகிறாராம். பான் இந்திய படமாக உருவாகும் கண்ணப்பரில் சிவனாக நடிக்கிறாராம் பிரபாஸ்.

கண்ணப்பர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். நயன்தாராவை பார்வதியாக பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா தற்போது ஜவான் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் படம் உலக உளவில் இதுவரை ரூ. 700 கோடி வசூல் செய்திருக்கிறது. ஜவான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் மும்பையில் நடந்தது. அதில் ஜவான் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். நயன்தாராவால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக ஷாருக்கான் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வீடியோ அனுப்பி வைத்தார் நயன்தாரா. அந்த வீடியோவை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். மேடையிலேயே நயன்தாராவின் அம்மாவுக்காக பிறந்தநாள் வாழ்த்து சொன்னார் ஷாருக்கான்.

ஜவான் படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கும் நயன்தாரா தன் சம்பளத்தை ரூ. 11 கோடியாக உயர்த்தியிருக்கிறார். அவர் நடித்த முதல் பாலிவுட் படமே ரிலீஸான வேகத்தில் ரூ. 700 கோடி வசூலித்திருப்பதால் இந்தி தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் கவனம் நயன்தாரா பக்கம் திரும்பியிருக்கிறது. விரைவில் நயன்தாராவின் அடுத்த பாலிவுட் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.