மணிப்பூர் மாநிலத்தில் விடுப்பில் சென்றிருந்த ராணுவ வீரர் கடத்தி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அங்கே ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும் பற்றி எரியும் நிலையில், முழுமையாக அமைதியான சூழல் ஏற்படவில்லை. இதனால் அங்கே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், இணையச் சேவைகளிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், வன்முறையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அங்கே சவால் இருந்தது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் பெண்கள் கொடூரமாக நடத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நாட்டையே உலுக்கியது. அதில் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியாகி பகீர் கிளப்பிய நிலையில், அங்கே அமைதியைக் கொண்டு வர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
இடையில் சில காலம் அங்கே அமைதி திரும்பிய போதிலும், இப்போது மீண்டும் வன்முறை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. மணிப்பூரில் உள்ள கிராமம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் இருந்து கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் செர்டோ தாங்தாங் கோம் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். இம்பால் மேற்கு மாவட்டத்தில் வீட்டில் அவர் இருந்த நிலையில், அவரை அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கும்பல் வீடு புகுந்து அவரை கடத்தியிருக்கிறது. இதற்கிடையே அவரது உறவினர் அவரை தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றனர். தாங்தாங் கோம் தனது 10 வயது மகனுடன் இருந்த போது, திடீரென உள்ளே புகுந்த 3 மர்ம நபர்களைத் தனது தந்தையும் கடத்தியதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
உள்ளே வந்த அந்த மர்ம நபர்கள் கோமின் தலையில் துப்பாக்கியை வைத்துள்ளனர். சுட்டுவிடுவேன் என மிரட்டி அவர்கள் வெள்ளை நிற காரில் ஏறச் சொன்னதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராணுவ வீரரின் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை தேடும் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலை இம்பால் கிழக்கில் மோங்ஜாமுக்கு அருகே உள்ள குனிங்தேக் என்ற கிராமத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீரரின் தலையில் தோட்டா பாய்ந்ததற்கான காயம் இருந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய ராணுவம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தின் வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் ராணுவத்தில் இருந்து ஒரு குழுவும் மணிப்பூர் விரைந்துள்ளது.