நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க உள்ளதா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., மக்களவை குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில் கூறியதாவது:-
கடந்த கூட்டத்தொடரில் 2 மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றி விட்டீர்கள். இன்னும் 2 மசோதாக்கள் உள்ளன. அவை முக்கியத்துவம் இல்லாதவை. இதற்கு ஏன் கொறடா மூலம் அறிவிப்பு கொடுக்க வேண்டும்?. எனவே நீங்கள் ஏதோ மறைமுக திட்டம் வைத்து இருக்கிறீர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.
இது தவிர குழு புகைப்படமும் எடுக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற முடிவில்தான் குழு புகைப்படம் எடுப்பது வழக்கம். அதுபோல மக்களவை, மாநிலங்களவை இரண்டையும் இணைத்து கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அப்படியென்றால் இந்த கூட்டத்தொடரோடு நாடாளுமன்றம் முடிவடைகிறதா? முன்கூட்டியே தேர்தலை நடத்தப்போகிறீர்களா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.