கேசிஆர், ஓவைசி இருவரும் மோடிக்கு சொந்தக்காரங்க: ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய ஏஜென்சிகள் விசாரணைகளை நடத்தினாலும், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தெலுங்கானாவில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஐதராபாதின் துக்குகுடா பகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்.பி, தெலுங்கானா முதல்வர் கேசிஆரையும் விமர்சித்துப் பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-

நாடு முழுவதும் அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்கள் மீதும் மத்திய விசாரணை அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம், ஊழலில் சாதனை படைத்து வரும் தெலுங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் உள்ளிட்ட பிஆா்எஸ் தலைவா்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அதேபோல், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவா்கள் மீதும் எந்த வழக்குகளும் இல்லை. ஏனென்றால், இவ்விரு கட்சித் தலைவா்களையும் தனக்கு நெருக்கமான நபர்களாக பிரதமர் மோடி கருதுகிறார். தனக்கு நெருக்கமானவா்கள் மீது பிரதமர் எப்போதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எதிர்க்கட்சிகள் மட்டுமே தாக்கப்படுகின்றன. மோடி ஜி தனது சொந்த மக்களை ஒருபோதும் தாக்குவதில்லை. அவர் உங்கள் முதல்வர் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர்களை தனது சொந்தக்காரர்களாக கருதுகிறார், எனவே, அங்கு அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. அனைத்து ஊழல் ரெக்கார்டுகளும் முறியடிக்கப்பட்டுள்ளன, ஆனால் எந்த வழக்கும் இல்லை. அடுத்த 100 நாட்களில் பிஆர்எஸ் ஆட்சி போய்விடும், பாஜக அல்லது ஏஐஎம்ஐஎம் என யாராலும் அதை மாற்ற முடியாது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி, பாஜக மட்டுமல்ல, பிஆர்எஸ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவற்றுடன் போராடுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் தனித்தனி கட்சிகள் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். நான் மக்களவையில் பிஆர்எஸ் எம்பிக்களைப் பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எப்போதெல்லாம் ஆதரவு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பிஆா்எஸ் பாஜகவுக்கு ஆதரவளிக்கும். வேளாண் சட்டங்களைக் கொண்டு வரும்போதும் சரி, ஜிஎஸ்டி சட்டத்திருத்தம் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பாஜகவுக்கு பி.ஆர்.எஸ் ஆதரவு அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.