நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர் கயல்விழி என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் பலமுறை விஜயலட்சுமி புகாராக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் நான் சென்னையை விட்டு கிளம்ப மாட்டேன் என கூறியிருந்தார். இதன் எதிரொலியாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சீமான் மீது பொய் புகார் அளித்ததாக கூறி விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக விமர்சித்திருந்தனர். மேலும் சீமானிடம் விஜயலட்சுமி புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஒரு கேவலம் என்றும் வேங்கைவயல் விவகாரம் போல் என் மீது கழிவ ஏன் கரைக்குறீங்க என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த இரு முறை வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் செப்டம்பர் 18ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் திடீர் டிவிஸ்ட்டாக நேற்று முன் தினம் நள்ளிரவில் சீமான் மீது கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் வாங்கிக் கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனதாக கூறப்படும் நிலையில் வீரலட்சுமியும் சீமானும் , வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர். சீமான் என்னதான் இருந்தாலும் அவர் என்னுடைய எதிரி அல்ல, அவர் என் கணவர், அவருடன் சில காலம் வாழ்ந்துள்ளேன். அவரை நான் கணவனாகத்தான் நினைக்கிறேன், நான் அவருடன் பேசிவிட்டேன். தற்போது புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்றார்.
விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் காவல் துறையினரோ சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றனர். இதனிடையே வீரலட்சுமி தன்னை அவதூறாக பேசி வருவதால் அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தனது வழக்கறிஞர் சங்கருடன் சீமான் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடைய மனைவி கயல்விழியுடன் சீமான் ஆஜரானார்.
இந்த நிலையில் அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். முன்னதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை சுற்றியுள்ள தெருக்களில் தடுப்பு வைத்து போலீஸார் தடுத்தனர். காவல் நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் 300 போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பில் இருந்தனர். சீமானுடன் வழக்கறிஞர் சேர்த்து 5 பேர் மட்டுமே காவல் நிலையத்திற்குள் அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது. சீமானை பார்க்க வந்த நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் நடந்தது.
முன்னதாக இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் 13 ஆண்டுகளாக் இந்த பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். பெண் வன்கொடுமை பேசும்போது, ஆண் வன் கொடுமையும் பேசனும் அல்லவா? நான், என் குடும்பம் சார்ந்த உறவுகள், என்னை சார்ந்த லட்சக்கணக்கான உறவுகள், உலகம் முழுவதும் இருக்கும் என் உறவுகள் என எங்களைப்படுத்திய வன்கொடுமையை? யார் யாரை சொல்வது என இருக்கிறது இல்லையா? விஜயலட்சுமியிடம் விசாரணை, ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து போகிறார்கள், மருத்துவ பரிசோதனை என பாட்ஷா பட பில்டப்பை விட ஓவராக இருக்கிறது. 2 பெண்கள் சேர்ந்து ஒருத்தனை வன்கொடுமை செய்வதை விட வேறு வன்கொடுமை இந்த சமூகத்தில் இருக்கிறதா? கோடி மக்களால் நேசிக்கப்படுகிற ஒரு மகனை நிறுத்தி வாய்க்கு வந்ததை எல்லாம் குற்றச்சாட்டு என சொல்ல, அதை ஊடகங்களும் போட ரசிப்பதை என்னவென்று சொல்வது? இந்த சமூகம் முன்பு நான் அவமானப்படுவது, அசிங்கப்படுவதை ரசிப்பது வன்கொடுமை இல்லையா?
என் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்கனும். 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பதெல்லாம் என்ன நகைச்சுவை? நான் திருட்டுத்தனமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதற்கு ஒரு ரசீது கொடுத்திருப்பாங்கதானே? அது எங்கே? 2013-ல் திருமணம் நடந்த போது அந்த ரசீதை தந்திருக்கலாமே? மவுனமாக இருக்கும் போது அதிகப்படியான பொய்கள் பேசப்படுகிறது என்கிறான். என்னுடைய மவுனத்தால் அதிகமாக பேசிவிட்டீர்கள். நான் ஆகப் பெரும் ஜனநாயகவாதி என்பதால் அதிகம் பேசினீர்கள். என் தம்பிகளை நான் பலியிடக் கூடாது என நினைத்ததால் வந்த பிரச்சனை. இனி எவனும் வேண்டாம்.. நானே வருவேன்.. நீ பேசு.. அதனால்தான் விஜயலட்சுமி, வீரலட்சுமியுடன் ஒரு சேர விசாரிக்கவும் சொன்னேன். வீரலட்சுமி, முக்தார் போன்றவர்களுக்கு என் வாழ்க்கையில் மன்னிப்பு கிடையாது. நீங்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது உரிய சான்றுகளைத் தர வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.