புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புராண வரைபடங்கள், சாணக்கியன் சிலை ஆகியவை இடம் பெற்றிருப்பது நாடு எங்கே போகிறது? என லோக்சபாவில் சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் லோக்சபாவில் சிபிஎம் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது:-
அவை தலைவர் அவர்களுக்கு வணக்கம்.. இந்த புகழ்மிக்க நாடாளுமன்றத்தின் 75 வது ஆண்டு சிறப்பை நினைவு கூறுகிற இந்த தருணத்தில் இந்தியாவின் வலிமைக்கும் செழுமைக்கும் காரணமாக இருந்த இந்த அவையில் பங்களிப்பு செய்த அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன். அரசியல் சாசனத்தை நிறைவேற்றிய நம்முடைய முன்னோர்களின் குரல் எதிரொலித்த ஒரு அவை இது.. ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாற்றிய பொழுது “விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறோம்” என்ற ஒரு புகழ்மிக்க உரையை ஜவஹர்லால் நேரு நிகழ்த்திய அவை இது. இந்த அவையினுடைய மேன்மை இந்த கட்டிடத்தையோ இந்த கட்டிடக்கலையோ இந்த கட்டிடத்தின் பொறியியலோ சார்ந்ததல்ல. இந்த கட்டிடத்தின் மேன்மை இந்த அவை எடுத்த முடிவுகள் சார்ந்தது. அந்த முடிவுகளில் பின்பற்றப்பட்ட கோட்பாடுகள் தத்துவங்கள் சார்ந்தது.
இந்த அவை தான் மொழி வழி மாநிலங்களை உருவாக்கிய அவை, இந்த அவை தான் மன்னர் மானியத்தை ஒழித்தது, இந்த அவை தான் பொதுத்துறை எனும் நவீன கோவில்களை உருவாக்கியது, வங்கிகள் தேசிய மையம் இன்சூரன்ஸ் தேசிய மயத்தை உருவாக்கியது, ஏக போகத்திற்க்கு கட்டுப்பாடுகள் விதித்தது, உள்ளாட்சிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தகவல் உரிமைச் சட்டம் ஆகியவறைக் கொண்டு வந்தது. இந்த சட்ட வடிவங்கள் அத்தனைக்கும் பின்னால் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிய கம்யூனிஸ்டுகளின் மகத்தான பங்களிப்பு இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
நாடாளுமன்றத்தின் வாசலில் ஒரு வாக்கியம் இருக்கிறது “ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கிற யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவை தங்கள் இல்லமாக கருதலாம்” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். எவ்வளவு உயர்ந்த சிந்தனை. இந்த தேசம் உலகத்திற்கு சொல்ல நினைக்கிற ஒரு சிந்தனை. இந்த சிந்தனை உருவாக்கிய நம்முடைய முன்னோர்களின் நினைவுகள் சூழ்ந்த ஒரு அவை இது. அரசியல் சாசனத்தின் அமர்வுகள் 1083 நாட்கள் நடந்தது. அந்த விவாதங்களினுடைய நினைவுகள் சூழ்ந்து இருக்கின்ற ஒரு அவை இது. அரசியல் சாசனத்தினுடைய குறிப்புகள் எழுதப்பட்ட ஏடுகளிலே கையெழுத்திட்டு இருக்கிற நம்முடைய முன்னோர்கள் எல்லா மொழியிலும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உருதுவில் ஹிந்தியில் சமஸ்கிருதத்தில் தமிழிலும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள் திரு மு. சி. வீரபாகு அவர்கள் தமிழிலே கையெழுத்திட்டு இருக்கிறார். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் பன்முகப்பட்ட இந்தியா அனைத்து மொழிகளுக்குமான சமத்துவ இந்தியா தான் நம்முடைய முன்னோர்கள் கண்ட கனவினுடைய அடிப்படை.
இந்த அவை அரசியல் சாசனத்தின் நினைவுகள் மட்டுமல்ல.. விடுதலைப் போராட்டத்தினுடைய தழும்புகள் நிறைந்த ஒரு அவை. பகத்சிங் கர்ஜித்த எதிரொலி இந்த அவை முழுவதும் இந்த அரங்கம் முழுவதும் படிந்துள்ளது. விடுதலை போராட்டத்தினுடைய தலைவர்கள் அண்ணல் காந்தி அம்பேத்கர் நேரு என்று அனைவருடைய சிலைகளும் உருவங்களும் நிறைந்து இருக்கிற அவையை விட்டுவிட்டு நாம் ஒரு புதிய கட்டடத்திற்கு செல்ல இருக்கின்றோம். அரசியல் சாசனத்தின் நினைவுகளை அகற்றிவிட்டு சாணக்கியனின் உருவம் பொறித்த ஒரு இடத்திற்கு இந்தியா கொண்டு செல்லப்பட இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் கவனப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
சாணக்கியனுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன சம்பந்தம்? தனது முதல் பொதுத் தேர்தலிலே அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்த ஒரு அவை இந்த அவை.. உலகத்தின் பல நாடுகள் நூற்றாண்டுகளாக கண்ட கனவை தனது முதல் தேர்தலிலேயே நிறைவேற்ற முடிவு எடுத்த இந்த அவையிலிருந்து முடியாட்சியின் கொடூர தத்துவத்தை வார்த்தைகளால் வடித்த சாணக்கியனின் முழு உருவச்சிலை வைத்திருக்கிற ஒரு அவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நண்பர்களே இங்கே எல்லாம் விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளாக இருக்கிறது என்றால் அந்த கட்டிடத்தில் எல்லாமே புராணங்களின் வார்ப்புகளாக இருக்கிறது. இந்தியா எங்கே செல்கிறது என்பது மிக முக்கியமான ஒரு கேள்வி..
இங்கே குறிப்பிட்டார்கள் படிக்கட்டை நாங்கள் தொட்டு வணங்கி உள்ளே வந்தோம் என்று.. இருக்கலாம் ஆனால் இங்கே இருந்து வெளியே செல்கிற பொழுது எதை விட்டு விட்டு செல்கிறீர்கள்? எத்தனையோ பிரதமர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார்கள்.. விவாதங்களில் பங்கெடுத்து இருக்கிறார்கள்.. காது கொடுத்து கேட்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒருமுறை கூட பதில் அளிக்காத ஒருவர் என்கிற நினைவைத்தான் இந்த அவையிலே நீங்கள் விட்டுவிட்டு செல்கிறீர்கள் என்பதை இந்த அவையிலே சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த தேசத்தின் பல பிரச்சினைகளுக்கு இந்த அவை முடிவு கட்டி இருக்கிறது கடந்த காலத்தில்.. ஆனால் சமீப காலத்தில் இந்த தேசத்தின் பல பிரச்சினைகள் இந்த அவையிலே இருந்து துவங்குகிறது என்ற வருத்தமும் வலியும் இங்கே சூழ்ந்து இருக்கிறது. நாடாளுமன்றம் என்பது புதிய கட்டிடம் அல்ல அது பின்பற்றுகின்ற கோட்பாடுகளும் ஜனநாயகத்திற்கு அளிக்கப்படுகின்ற மதிப்பிலும் தான் அதற்கு உயிர் இருக்கிறது. அந்த உயிரை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அல்ல.. 140 கோடி மக்களும் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கையோடு புதிய அரங்கை நோக்கி நாங்கள் அடி எடுத்து வைக்கிறோம். நன்றி வணக்கம். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பேசினார்.