முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரி தி.மு.க. அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது மருமகனுக்கு அளித்துள்ளதாகவும், இதில் உண்மை நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிட்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் உடன் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், இந்த வழக்கில் புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதிக்கு ஆஜரான வக்கீல் கபில் சிபல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் ஆஜராக கூடாது. அதை ‘ஆபீஸ் ஆப் பிராபிட்’ ஆக கருத வேண்டும் என ஆட்சேபனை தெரிவித்தார். மேலும், புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதியுடன் இணைந்து லஞ்ச ஒழிப்புத்துறை சதியில் ஈடுபட்டுள்ளது என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஆஜர் ஆனீர்களா என வக்கீல் கபில் சிபலிடம் நீதிபதிகள் கேட்டனர். ஆட்சேபனையை தொடர்ந்து, வழக்கிலிருந்து விலகத்தயார் என கபில் சிபல் தெரிவித்தார். அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை வரும் 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.