கனடாவில் சீக்கிய தலைவர் கொலை வழக்கு காரணமாக இந்தியா-கனடா உறவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிஜ்ஜார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இப்படியாக ஏராளமான வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தது. இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில்தான் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது இந்தியா என்று குற்றம்சாட்டியுள்ளது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கனடா அரசு இந்திய நாட்டின் தூதர அதிகாரி ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டுள்ளது. அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கனடா மீது இந்திய அதிகாரிகள் ஏராளமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறை கனடாவுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் கனடா அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது, “கனடா அரசு இந்தியாவின் கோரிக்கைகளை முற்றிலுமாக புறந்தள்ளியுள்ளது. ஒன்பது பிரிவினைவாத அமைப்புக்கள் கனடாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கனடிய அரசு இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும், தங்கள் நாட்டின் குடிமகனை கொலை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனடா கூறியுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை வழங்கியுள்ள இந்த அறிவுறுத்தலில், “இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நம்முடைய தூதரக அதிகாரிகள் கனடிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்திய மாணவர்கள் கனடாவில் உள்ள தூதரகத்தில் தங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் தூதரகம் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்புகொள்ள இது உதவும்” என்று கூறியுள்ளது.