சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை விடியோ எடுக்க வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் அல்லது காவல்துறையிடம் அனுமதி பெற்ற பிறகே அவர்கள் காணொலிகளை எடுக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை விடியோவாக எடுத்து பலரும் இணையம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள், யூடியூப் சேனல்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் வீட்டைச் சுற்றி சூழ்ந்து கொள்வதால், இறுதிச் சடங்குகளுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பதோடு அஞ்சலி செலுத்த வரும் பிரபலங்கள், நண்பர்கள், அண்டை வீட்டினர் ஆகியோரிடம் கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இல்லத்திலும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இல்லத்திலும் துக்க நிகழ்வுகளை காணொளியாக எடுக்கச் சென்றவர்கள் விதிமீறிலில் ஈடுபட்டதோடு அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம் இறந்தவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
உச்சமாக, மாரிமுத்து உடலைக் காண வந்த எதிர்நீச்சல் இயக்குநரிடம், ‘அடுத்த குணசேகரன் யார்?’ என ஒருவர் கேள்விகேட்டு அநாகரீகமாக நடந்துகொண்டார். அதேபோல், நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட விஜய் ஆண்டனியின் மகள் துக்க நிகழ்வின்போது, அவரின் பள்ளி ஆசிரியை ஒருவரை விடாமல் துரத்திச் சென்று கேள்விகேட்ட விடியோவும் வைரலாகி பலருக்கும் சங்கடத்தை அளித்தது.
இந்நிலையில், சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை விடியோ எடுக்க வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் அல்லது காவல்துறையிடம் அனுமதி பெற்ற பிறகே அவர்கள் காணொலிகளை எடுக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-
சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலிச்சித்திரமா? சமூக வலைதளங்கள் பெருகிய பின்பு பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதத்தில் அறம் இல்லை. இவர்களால், தேவையற்ற கூட்டம் சேர்கிறது. முறையாக, அஞ்சலி செலுத்த வருபவர்களையும் வர முடியாமல் செய்கிறார்கள். இது கடுமையான மனச்சங்கடத்தைத் தருகிறது. இனி, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் காவல்துறையிடமும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமும் அனுமதி பெறாமல் காணொலிகளை எடுக்கக் கூடாது என கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.