காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக இருநாட்டு உறவுகள் கடும் சரிவை நோக்கி சென்று கொண்டு உள்ளன.
கனடா பிரதமர் இந்த பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்தியா – கனடா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் செயல்முறைகளை இந்தியா நிறுத்தி உள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள பல்வேறு தூதரக அதிகாரிகளுக்கு தொடர்ந்து காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தால் அளிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்னைகளால் விசா வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இதுவரை எந்த தகவல்களையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது. கனடா தனது நற்பெயரை தற்காத்துக் கொள்ள வேண்டும். நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சொல்லும் கனடா இதுவரை தகுந்த ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை என்றும் ஆனால் இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு கனடாவில் உள்ள நபர்களின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தும் மேற்கொண்டு நடவடிக்கைகளை கனடா அரசு எடுக்கவில்லை என பக்சி தெரிவித்தார்.
1980களில் சீக்கியர்களுக்கு “காலிஸ்தான்” என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குரல் கனடா நாட்டில் வலுப்பெற்றிருக்கிறது. கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதியும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடா நாட்டின் வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவிற்கு பங்கிருப்பதாக சில தினங்களுக்கு முன் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தொடர் நடவடிக்கையாக இந்திய தூதரக அதிகாரியையும் கனடா அரசு வெளியேற்றியது. இந்தியர்களை அதிர வைத்த இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு, பதில் நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய வழங்கப்படும் “விசா” எனப்படும் உள்நுழையும் அனுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து சில வருடங்களாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பலர் செல்கின்றனர். இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சென்று கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டு மூலம் பஞ்சாப்பிலிருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கனடாவில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரு கும்பலுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இவர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.