சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது: கே.எஸ்.அழகிரி

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திண்டுக்கல்லில் இன்று திண்டுக்கல், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடி வட்டார, நகர, நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டு கொள்கிறார். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தி பேசும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்குவங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது. தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சியை இந்தியா கூட்டணி கண்டிக்கிறது.

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க தனது ஆட்சியின் நிறைவு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன்மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது. அதனால்தான் 33 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலை அதிபர் தேர்தல் போல நடத்த மோடி முயன்று வருகிறார்.

காவிரி பிரச்சனையை பொறுத்தவரையில் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. வறட்சியான காலகட்டங்களிலும், வெள்ள காலகட்டத்திலும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனை பின்பற்றவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைபாட்டிலேயே உள்ளோம். ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.