அரசுப்பள்ளிகளில் இஸ்ரோவுக்கான பெல்லோஷிப், உதவித்தொகை, இண்டர்ன்ஷிப்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசினார்.
சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரை இறங்கியது குறித்த விவாதம் நாடளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நமது இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் 23ஆம் தேதி என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம். கோடிக்கணக்கான இந்திய மக்கள் சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதை அன்று பார்த்தனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
இஸ்ரோவில் பங்களிப்பை அளித்த டி.கே.அனுராதா, எம்.வனிதா. லத்திகாம்பா, கல்பனா கலேஸ்தி, மங்களா மணி, சுபஷிக் நாயக், சிவன், வீரமுத்துவேல் ஆகியோர் சிறுநகரங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரசுப்பள்ளிகளும். அரசுக்கல்லூரிகளிலும் படித்தவர்கள். இவர்களுக்கு இந்த நேரத்தில் பெருமை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆன்மிகத்தையும், நம்பிக்கைகளையும் போட்டு நாம் குழப்பிக் கொள்கிறோம். ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தத்துவங்களுக்கும் அறிவியலுக்கு இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாம் சில சமயங்களில் நாம் நம்பிக்கைகளை ஆன்மீகம் என்றும் அறிவியல் என்றும் குழப்பிக் கொள்கிறோம். நம்பிக்கைகள் என்பது இங்கு கேள்விக்குரியது அல்ல; ஆனால் ஆன்மீகமும், அறிவியலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நம்பிக்கைகளையும் ஆன்மீகத்தையும் குழப்ப வேண்டாம்.
நான் கடவுள் நம்பிக்கை உடையவன், எனக்கு ஜோதிடம், சடங்குகளில் நம்பிக்கை உண்டு. அது என் நம்பிக்கை. ஆனால் அதை ஆன்மீகம் என்றோ அல்லது அறிவியலுடனோ ஒப்பிட்டு குழப்பிக்கொள்ள கூடாது.
அறிவியல் என்பது சோதனை முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அது கட்டாயம் சோதிக்கப்பட்டாக வேண்டும். ஆன்மீகமும் அதைபோல் சோதிக்கப்பட்டாக வேண்டும். நிரந்தரம் என்று சொல்வது எதுவும் அறிவியலாக இருக்க முடியாது. ஏனென்றால் அறிவியல் எப்போது கேள்விக்குள்ளாக்கப்படும். ஆனால் நம்பிக்கைகளை கேள்விகளுக்குட்படுத்த முடியாது. எனவே அறிவியலையும் உலக நம்பிக்கைகளையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது மேலும் மோசமாகி வருகிறது. இஸ்ரோ போன்ற நிறுவனங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் அறிவியல் சார்ந்த மனநிலையை பராமரிப்பது அவசியம்.
பாலிவுட் பட தயாரிப்புகளுக்காகும் நிதியில் நிலவில் மலிவான செலவில் தரையிறங்க முடியும் என்று இந்திய நிரூபித்துள்ளது. அதே வேளையில் இன்றும் நாட்டில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை உள்ளது. ஒரு பருவமழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாத சாலைகளை நம்மால் அமைக்க முடிவது எப்படி? தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலை பற்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பேசுகிறோம். ஆனால் இந்த பாராளுமன்றம் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேசுவோம் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.
இத்தகைய அறிவியலை எங்கே அதை முழுமையாக இழந்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வேர்களை தேடி நாம் பயணிக்க வேண்டும்.
ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் மேதைகள் இருக்கிறார்கள் என்பதற்கு இஸ்ரோ ஒரு சிறந்த உதாரணம்.
இஸ்ரோ என்பது சர்வதேச பள்ளிகளையோ, ஐஐடிக்களையோ, ஆக்ஸ்போர்ட், கேம்பிட்ஜ்கள் பற்றியது அல்ல; இது இந்தியாவில் உள்ள அறிவாளிகளை பற்றியது. அரசுப்பள்ளிகளில் இஸ்ரோவுக்கான பெல்லோஷிப், உதவித்தொகை, இண்டர்ன்ஷிப்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இதனை தேசிய பரப்புரையாக நாம் செய்ய வேண்டும். அடுத்த கல்பனா சாவ்லாக்களையும், அடுத்த விக்ரம் சாராபாய்களையும் நாம் கண்டறிய வேண்டும்.
நமது வராலாறு சார்ந்த அறிவியல் அறிவை நவீன அறிவியல் உடன் இணைப்பது அவசியம். ஆனால் நமது நம்பிக்கைகளை இதில் குழப்பிக் கொள்ள கூடாது. எனக்கு விநாயகர் மீது நம்பிக்கை உண்டு; ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் பால் குடிப்பதாக என்னிடம் சொன்னார்கள் ஆனால் அதில் உள்ள அறிவியல் விளைவு குறித்து யாரும் விளக்கவில்லை. விநாயகருக்குத்தான் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் யானை தலை எப்படி மனித உடலோடு சேரும் என்பதை யாராலும் விளக்க முடியவில்லை. நம்பிக்கை என்பது வேறு; ஆன்மீகம் என்பது வேறு. மாறுபட்ட கேள்விகளுக்கு பதில் தருவதன் மூலமே அறிவியல் சார்ந்த தேசத்திற்கு நம்மால் அடித்தளமிட முடியும். இந்த நேரத்தில் இஸ்ரோவின் உண்மையான ஹீரோக்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.