60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று ஆனைமலை பாத யாத்திரையில் பா.ஜனதா மாநில அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்.. என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை தொடங்கி, சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூரில் நேற்று மாலை 4.45 மணிக்கு பாத யாத்திரையை தொடங்கினார். அவருக்கு கட்சியினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழிநெடுகிலும் பூக்கள் தூவி வரவேற்றனர். யாத்திரையின்போது அண்ணாமலையுடன் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாலை 6.30 மணிக்கு யாத்திரை ஆனைமலை முக்கோணத்தை வந்தடைந்தது. அப்போது அண்ணாமலை, திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
வால்பாறை தொகுதி மக்கள் தண்ணீர் பிரச்சினையில் தொடங்கி புலிகள் சரணாலயம் வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும் நம்மை ஆனைமலை மாசாணியம்மன் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் முக்கியமான ஒரு திட்டம். ஆனைமலை குன்றுகளில் இருந்து உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கின்ற ஆறு நதிகளை கிழக்கு நோக்கி திருப்பி திருப்பூர், கோவை மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த திட்டத்தை கொண்டு வந்தவர் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர். இந்த திட்டத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் காமராஜர் படமும், பெயரும் இல்லை.
காமராஜர் 9 ஆண்டு ஆட்சியில் 12 அணைகளை கட்டி, விவசாயத்தை செழிக்க செய்தார். ஆனால் தி.மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து அனைவரையும் குடிக்க வைக்கின்றனர். இதுதான் தி.மு.க. அரசின் சாதனை. விவசாயிகளுக்கு தேவையான நீர்பாசனத்தை அதிகரிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இதற்கு உதாரணமாக 65 ஆண்டு காலமாக ஆனைமலை ஆறு திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதேபோல பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கு கேரள முதல் மந்திரியோடு இணக்கமாக உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவருடன் பேசி ஆனைமலை ஆறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏழை மக்களின் நலனுக்காகவும், கடுகளவு கூட குற்றச்சாட்டு இல்லாமலும், ஊழல் இல்லாத அரசாகவும் செயல்பட்டு வருகிறது. பா.ஜனதாவின் 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக மகளிர் உரிமைத்தொகையை எப்படி எல்லாம் ஏமாற்றி உள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது 60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.