ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர். தனது வீட்டில் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து இவர் ஜெபம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் யாரும் அங்கு வந்து யாரும் ஜெபம் செய்யக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பீதியடைந்த அனைவரும் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தனது வீட்டிலேயே குடும்பத்தினருடன் ஜெபம் செய்து உள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் கூட்டமாக வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த 30 அதிகமானோர் ஜெபம் முடிந்து வெளியில் வந்த அந்த 6 பேர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். உயிருக்குப் போராடியவர்கள் குணமடைந்தும் வீடு திரும்ப முடியாமல், உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பு கருதி தங்கி உள்ளார்கள். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது:-
ஈரோடு, சென்னிமலை அருகே கத்தகொடிக்காடு என்னுமிடத்தில் கிறித்தவ மக்களின் மீது இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு மதவெறி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய மதவெறியாட்டம் தமிழகத்தில் தலைதூக்குவது மிகவும் ஆபத்தான போக்காகும். வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சங்பரிவார்களின் இத்தகு வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறைப் போக்கினைக் கண்டித்து நேற்று சென்னிமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னி மலையை ஒட்டிய திருமுகம் மலர்ந்தபுரம் பகுதியில் இதே போல் வழிபாடு நடத்தியவர்கள் மீது இதே கும்பல்தான் தாக்குதல் நடத்தியது. எனவே இந்த மனிதநேயமற்ற மதவெறியர்களை உடனே சிறைப்படுத்த வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.