மின் கட்டண உயர்வால் தொழில் முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான மின்கட்டணச் சுமை ஏற்றிவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, டாலர் சிட்டி, டல் சிட்டி என்று வழக்கம்போல ஒப்பித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சிறையில் இருக்கும் சாராய அமைச்சர் ஆரம்பித்து வைத்த மின்கட்டண உயர்வு, தற்போது 15% முதல் 50% கட்டண உயர்வு, நிலைக் கட்டணத்துக்கு 430 சதவீதம் உயர்வு, காலை, மாலையில் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய 6 மணியிலிருந்து 10 மணி வரை உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, 15 சதவீதம் கட்டண உயர்வு என, தொழில் முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், நாளைய தினம் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவோர்கள் தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நடைபெற்ற திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், பாஜக தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை வரிசையாகப் பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்றாத பாஜக அரசு, ரிவர்ஸ் கியரில் நாட்டை கொண்டு சென்று கொண்டிருப்பதாகப் பேசினார். மேலும், டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் இப்போது ‘டல் சிட்டி’ ஆகிவிட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையின் தொழில்துறையானது திறனற்ற பா.ஜ.க அரசால் தேய்பிறை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு இணையாக உயரும் என்று வாய்ப்பந்தல் போட்டார்கள். ஆனால் இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் இருக்கிறது. டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதி எல்லாம் என்ன ஆனது?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.