2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது: எடப்பாடி பழனிசாமி!

2024 மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக முடிவு செய்து தீர்மானத்தை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை” சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆற்றி உரையில் குறிப்பிட்ட விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர், “இனி எந்த விதமான பிரச்சனைகள் வந்தாலும் அதை நாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். வரும் 2024 மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி 2026 சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது. கட்சியின் நிலைபாடு தொடர்பாக சிறுபான்மை மக்களை சந்தித்து நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். கூட்டணி முறிவு தொடர்பாக சந்தேகமே வேண்டாம். கட்சியின் கருத்துக்களை மக்களிடம் உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள்.” என அவர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.