2024ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை பஞ்சாயத்துக்களாக வெடிக்கச் செய்தது. அதிமுகவின் தலைவர்கள் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர். குறிப்பாக கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் அண்ணாமலை மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ஏற்கெனவே அண்ணாமலை மீது பாஜக தலைமையிடம் அதிமுக ஏராளமான புகார்களை அளித்திருந்தது. இப்படி இருக்கையில், அண்ணா குறித்து அவர் பேசியதற்கு கூட பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. எனவேதான் அண்ணாமலை மீதான் விமர்சனங்கள் சூடுபிடித்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இதனையடுத்து இது குறித்து இரு தினங்களுக்கு முன்னர் விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், “எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்” என்று கூறினார். அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, “மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில்தான் இன்று அவசரமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்திருப்பது எனக்கு மகிழச்சியை தருகிறது. இதற்கான வாழ்த்தக்களை நான் அப்போதே சொல்லிவிட்டேன். பாஜக, காங்கிரஸ் எல்லாம் நம்முடைய நிலத்திற்கு தேவையில்லை. இவைகளை கூட அழைத்து சென்று 10 இடம் 2 இடம் என வென்று கொடுப்பது எல்லாம் பயனற்றது. பாஜகவோ, காங்கிரஸோ இந்த நிலத்தில், இந்த இனத்திற்காக எந்த உரிமைக்காவது நின்றிருக்கிறதா? என்று சொல்லுங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்கிறது. இங்கிருக்கும் காங்கிரஸ் அதை எதிர்த்து போராடுமா? அதேபோலதான் பாஜகவும் ஒரு தொங்கு சதை. எக்ஸ்ட்ரா லக்கேஜ். எப்போதும் இதுபோன்ற துணிச்சலான முடிவை அதிமுகதான் எடுக்கும். ஒரு காலத்தில் அம்மையார் ஜெயலலிதா எடுத்திருந்தார். தற்போது எடப்பாடி காலம் தாழ்த்தி எடுத்திருக்கிறார். எனவே இந்த முடிவு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.