காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால், தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் தனராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் தன்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக, தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதி நீர் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இதைப் புரிந்துகொள்ள முடியாமல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளை தாக்குவதும், கண்ணாடிகளை உடைப்பதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக லாரி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று காவிரி நதிநீர் பிரச்சினை வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்தில் முழு கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல வேண்டாம். மேலும், வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழக லாரிகள் தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாக கொண்டு வந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கர்நாடக அரசு லாரி ஓட்டுநர்களுக்கும் லாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வடமாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளை ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு கர்நாடகா அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதேபோல, கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வரும் அனைத்து லாரிகளுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.