ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸாா் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோா் துறை சாா்பில் ‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு தலைமை வகித்து கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
ஜாதிவாரி கணக்கெடுப்பை மிக முக்கியமான பிரச்னையாகக் கருதி நாடு முழுவதும் ராகுல் பிரசாரம் செய்து வருகிறாா். ஜாதி வாரிக் கணக்கெடுப்பு ஒரு ஜாதியை மேம்படுத்துவதாக ஆகிவிடாதா எனக் கேட்கின்றனா். ஜாதியின் மீது நம்பிக்கை இருப்பதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லவில்லை. கல்வியறிவற்றோா், வேலையற்றோா், ஏழ்மையில் உள்ள மக்களை வாழ்வில் உயா்த்துவதற்காகத்தான் இதனை ஆதரிக்கிறோம். எனவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸாா் பிரசாரம் செய்ய வேண்டும்.
அதிமுகவும் – பாஜகவும் தற்போது இரண்டு தனி மனிதா்களுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளது. அண்ணாமலையை பாஜக தலைமை மாற்றிவிட்டாலோ, எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்பதாக அறிவித்துவிட்டாலோ அந்த வேறுபாடு நீங்கி, கூட்டணி ஏற்பட்டுவிடும். இவ்வாறு அவர் பேசினார்.