சீனாவின் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது. இந்நிலையில் சீன உளவு கப்பலுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை கூறியுள்ளது.
இந்தியாவுக்கு பல்வேறு வகைகளிலும் சவாலாக திகழும் சீனா தனது அதிநவீன படைகள் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் பணிகளை அடிக்கடி மேற்கொள்கிறது. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் சீனா தீவிரமாக உள்ளது. இதற்காக அடிக்கடி தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வருகிறது. கடந்த ஆண்டு இலங்கையின் உளவு கப்பலான இவான்வாங்-5 என்ற அதிநவீன கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் அது தென் இந்தியாவின் பல பகுதிகளை உளவு பார்த்ததாக கருதப்பட்டது. சீன கப்பலை அனுமதித்தற்காக இலங்கையிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.
இந்த நிலையில் இலங்கைக்கு சீனாவின் மற்றொரு ஆராய்ச்சி உளவு கப்பல் சமீபத்தில் புறப்பட்டு வந்தது. சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற அந்த கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அடுத்த மாதம் அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தது. அந்த கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளை அந்த கப்பலால் மிக எளிதாக படம் பிடித்து ஆய்வு செய்து விட முடியும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தின் அருகே வரும் இந்த அபாயத்தை உணர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் தொடர்பு கொண்டு பேசியது. இதையடுத்து சீன உளவு கப்பல் வருகை பற்றி இலங்கை ஆய்வு செய்தது.
இந்த நிலையில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தற்போது அறிவித்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலிசப்ரி இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை. எங்கள் கடல் பகுதி அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்த சீன உளவு கப்பல் இலங்கையின் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தது. தற்போது அந்த ஆராய்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி அலிசப்ரி சமீபத்தில் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க சென்று இருந்தார். அப்போது அமெரிக்க மந்திரியை அவர் சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் சீன உளவு கப்பல் வருகைக்கு அதிருப்தி தெரிவித்து அமெரிக்காவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.