மணிப்பூர் மாணவர்கள் கொலைக்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு, இவர்கள் இருவரின் உடல்கள் காணப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கு நடைபெற்ற கலவரத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. காவல்துறையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு, இவர்கள் இருவரின் உடல்கள் காணப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அனைவரையும் அதிர்ச்சியுற செய்திருக்கும் இந்த படுகொலை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:-

இனப்படுகொலைகளில் குழந்தைகள்தான் பலிகடா ஆகிறார்கள். அவர்களை காக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டியது நமது கடமை. கொடூர கொலைக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், “வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு விட்டது. மணிப்பூர் காவல்துறை முழு ஒத்துழைப்பையும் தந்து வருகிறது. குற்றவாளிகளை தேடும் வேட்டை துவங்கி விட்டது” என தெரிவித்தார்.