விஜயபாஸ்கரின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது அப்போதே திமுக பல்வேறு ஊழல் புகார்களை முன்வைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 2021 அக்டோபர் மாதம் 18ஆம் தேதி சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 2016 முதல் 21 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் அசையா சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாக வழக்கு பதிவு செய்ய்யப்பட்டது. அப்போது நடைபெற்ற சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம் 4.87 கிலோ தங்கம் 136 கனரக வாகனங்களின் சான்றுகள் 19 ஹார்ட் டிஸ்குகள் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 22ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர். தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை நகலில் சில பக்கங்கள் விடுபட்டிருந்ததாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விடுபட்ட பக்கங்களை வழங்க அறிவுறுத்திய நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.