மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது: ராகுல்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி ம.பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ரத்தம் படிந்த ஆடையுடன் உதவி கேட்டு சுமார் இரண்டு மணி நேரம் வீதிகளில் அலைந்து திரிந்திருக்கிறார். ஆனால் அந்த சிறுமிக்கு உதவ யாரும் முன்வரவில்லை. மாறாக அந்த சிறுமியை துரத்தியடித்துள்ளனர். ரத்தம் தோய்ந்த ஆடையுடன் சோர்வாக சிறுமி வீதி வீதியாக சென்று, குடிக்க தண்ணீர் கேட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. சிறுமி ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் கடைசியாக ஒரு ஆசிரமத்தின் வாசலில் சென்று விழுந்திருக்கிறார். ஆசிரமத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து உஜ்ஜைனி நகரின் போலீஸ் எஸ்.பி. சச்சின் சர்மா கூறுகையில், “சிறுமி தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இந்த சம்பவம் நடந்தது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. சிறுமிக்கு விழிப்பு வந்து வாக்குமூலம் அளித்தால்தான் விஷயம் என்னவென்று தெரிய வரும். அதேபோல சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சிறுமி வந்த திசையில் பயணித்த வாகனங்களின் நம்பர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

அதேபோல இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியின் கடுமையாக கண்டனத்தை கூறி வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், “இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல ராகுல்காந்தி, “இந்த சம்பவம் இந்திய தாயின் இதயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியாமல் பாஜக அரசு இருக்கிறது. இந்த மாநிலத்தில் நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, அடிப்படை உரிமையும் இல்லை. மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது. ஆனால் மாநில முதலமைச்சருக்கும், நாட்டின் பிரதமருக்கும் வெட்கமே இல்லை. தேர்தல் வாக்குறுதிகளுக்கும், பொய்யான முழக்கங்களுக்கும் மத்தியில் தங்கள் மாநில பெண்களின் அலறலை அடக்கிவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.