நீலகிரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் ஆ.ராசாவின் பணி. இப்படி பேசுவதற்காகவா இவருக்கு நீலகிரி மக்கள் வாக்களித்தார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ பயணம் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழ்நாட்டிலேயே அதிக பிரச்சனைகள் இருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி கூடலூர். பாராளுமன்றத் தொகுதி நீலகிரி. தமிழ், மலையாளம், கன்னடம், உருது என எல்லா மொழிகளும் பேசப்படும் பகுதி. திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை. முதுமலை வனவிலங்கு காப்பகம், கூடலூர் தொகுதியில் தான் உள்ளது. தமிழகத்தின் மாநில விலங்கு எது என்று கேட்டால் அது நம் மாநிலத்தில் பலருக்கு தெரியாது. நீலகிரி மாவட்டத்தின் வரையாடு தான் தமிழகத்தின் மாநில விலங்கு. இந்த உயிரினம் இன்று அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தான் இத்தனை ஆண்டுகளாக நம் மாநில விலங்கை நாம் பாதுகாத்த லட்சணம். தற்போதுதான் வரையாடுகளை காக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. கடந்த 40 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் இறந்துவிட்டன. இதை விசாரிக்க நேற்று மத்திய புலிகள் காக்கும் இயக்கத்திலிருந்து அதிகாரிகள் நீலகிரி வந்துள்ளார்கள்.
தமிழின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை எப்போதும் மறைத்து தங்கள் குடும்ப பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம். இந்தியாவின் புகழ்பெற்ற தேயிலை நீலகிரி தேயிலை என்றால் அது மிகையாகாது. இந்த நீலகிரி தேயிலையின் புகழ் தற்போது உலகம் முழுவதும் பரவ செய்துள்ளார் நமது பாரத பிரதமர் மோடி. சமீபத்தில் நிறைவேறிய ஜி 20 மாநாட்டில் பங்குபெற்ற உலகத் தலைவர்களுக்கு ஒரு பரிசு பெட்டகத்தை நமது பாரத பிரதமர் வழங்கினார். அந்த பரிசு பெட்டகத்தில் நீலகிரி தேயிலையும் இடம்பெற்றது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் செல்ல ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டார். தமிழக கலாச்சாரத்தைப் பாதுகாக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் இயற்கை தமிழகத்திற்கு வழங்கிய கொடை. அதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. திமுக, இயற்கையைப் பாதுகாக்காது. பெரம்பலூர் தொகுதியில் இருந்து நீலகிரிக்கு ஓடிவந்தவர் இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் 2G ராஜா. இவர் தொகுதிக்கு வருவதே கிடையாது. ஊர் ஊராகச் சென்று, இந்து தர்மத்தைப் பழிப்பதுதான் இவரது வேலை. இவரையே திமுகவில் சமூக நீதி கடைபிடிக்காமல் சொந்தத் தொகுதியில் இருந்து நீலகிரி தொகுதிக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். “சனாதன தர்மம் என்பது ஹெச்ஐவி, தொழுநோய், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்” என எப்போதும் இந்து மதத்தை தரக்குறைவாகப் பேசுவதுதான் இவரது பணி. இப்படி பேசுவதற்காகவா இவருக்கு நீலகிரி மக்கள் வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள்?
நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைக்காக, பாஜக எப்போதும் களத்தில் போராடியிருக்கிறது. டிசம்பர் 2021 – சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைத்த தமிழக அரசுக்குத் துணை நின்ற, இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விவசாயிகளை சந்தித்துப் போராட்டம் நடத்தி, விவசாய நிலங்களை காப்பாற்றினோம். நவம்பர் 2022 – இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திரும்பி வந்த நம் தமிழ் சொந்தங்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, TANTEA தொழிற்சாலையை மூட நினைத்த தமிழக அரசுக்கு எதிராக, இதே கூடலூரில் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தை தமிழக அரசை கைவிடச் செய்தோம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு குறு தேயிலை தோட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, தேயிலை ஒரு கிலோவுக்கு 8 முதல் 13 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. தேயிலையில் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் மற்றும் தூள் தேயிலை விலையையும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை, நமது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண தமிழக பாஜக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்.
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒரே சமயத்தில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் வழங்கியுள்ளார். அதில் ஒன்று நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 11,232 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு வழங்கப்பட்டுள்ளது. 78,260 வீடுகளில் குழாயில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 40,238 வீடுகளில் இலவச கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளது. 17,412 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களுக்கு 400 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற சமையல் எரிவாயு உபயோகிப்பாளர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 66,656 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 48,163 பேர் பிரதமரின் கிஸான் திட்டம் மூலம் வருடம் 6000 ரூபாய் பெறுகிறார்கள். நீலகிரி மாவட்டத்திற்கு 1568 கோடி ரூபாய் முத்ரா கடனாக வழங்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் இருந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்துபவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான வளர்ச்சியைப் பெற, மக்கள் தேவைகளைக் கேட்டுப் பெற, மத்தியிலும் நமது தொகுதியிலும் பாஜகவுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.