ஒரு கன்னட படம் கூட தமிழ்நாட்டில் ஓடாது: சாட்டை துரைமுருகன்

நடிகர் சித்தார்த்தின் சித்தா பட நிகழ்வில் கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டதற்கு பதிலடி கொடுத்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னட நடிகர் படம் கூட ஓடாது என நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்கக் கூடாது என்பது கன்னட அமைப்புகளின் வலியுறுத்தல். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் சொற்ப அளவு நீரை தமிழ்நாட்டுக்க் கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கர்நாடகா பந்த் போராட்டம் இன்று நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா முழுவதும் 2,000 அமைப்புகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைபின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது உள்ளே கும்பலாக நுழைந்த கன்னட அமைப்பினர், இங்கே இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகிறது.. அதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.. இங்கே வந்து தமிழ் படம் பற்றி பேசிக் கொண்டிருப்பதா? என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடிகர் சித்தார்த் தமது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கன்னட அமைப்பினரின் இந்த செயலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

நடிகர் சித்தார்த் அவர்களை பேச விடாது தடுத்து அனுப்பியிருக்கிற கன்னட இனவெறியர்களின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. கன்னட நடிகர்கள் தமிழ்நாட்டில் பெரிதும் நடிக்கிறார்கள் என்பது இந்த இனவெறி கும்பலுக்கு தெரியுமா தெரியாதா? பதிலுக்கு நாங்கள் செய்ய ஆரம்பித்தால் ஒரு கன்னட நடிகர்களின் படம் தமிழ்நாட்டில் ஓடாது!. இவ்வாறு சாட்டை துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.