காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய அளவில் பந்த் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகாவிடம் இருந்து பெறுவதே பெரும் போராட்டம் தான். இந்த ஆண்டும் கூட காவிரி நீர் விவகாரத்தில் அதே நிலைதான். கர்நாடக தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் தர மறுத்தே வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை கூட கர்நாடகா சென்று பார்த்தது. இருப்பினும், வல்லுநர் குழு பரிந்துரை அடிப்படையில் நீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதன்படி நீர் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நீர் போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் நீர் வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இதற்குக் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகாவில் இந்தாண்டு மழை குறைந்துள்ளதாகவும் இதனால் நீரைத் தர முடியாது என்பதே அவர்கள் வாதம்.
தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரக் கூடாது என்றெல்லாம் கர்நாடக அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. இதை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டது. இந்த பந்த் காரணமாகக் கர்நாடகாவில் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பந்த் காரணமாகப் பெங்களூர் ஏர்போர்டிலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. கன்னடா அமைப்புகள் நடத்தும் இந்த பந்த்தால் பல இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது.
இதற்கிடையே இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே இன்று ஒரே நாளில் மட்டும் 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆப்ரேஷனல் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், இது குறித்து பயணிகளுக்குச் சரியான நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கர்நாடக பந்த் காரணமாகப் பயணிகள் பலரும் தங்கள் விமான டிக்கெட்களை ரத்து செய்துவிட்டதாகலும் இதன் காரணமாகவே விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை கேன்சல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்கக் கர்நாடகா கொடியுடன் விமான நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்த வந்த 5 போர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் விமான நிலையத்திற்குள் வர வேண்டும் என்பதற்காக விமான டிக்கெட்களை எடுத்துள்ளனர். இதனால் வெளியே இருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும், உள்ளே வந்ததும் அவர்கள் 5 பேரும் திடீரென போராட்டத்தை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.