கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது: துரைமுருகன்

கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது. ஆனால், அதை தர மாட்டேன் என்று சொல்வது நியாயம் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் சார்பில் இன்று கர்நாடக மாநிலத்தில் பந்த் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. பந்த் காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று பிற்பகலில் கூடுகிறது. இந்த நிலையில், இன்று தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரியில் வினாடிக்கு 12, 500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்துவோம். ஆனால், காவிரி ஒழுங்காற்று குழு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கதான் பரிந்துரைத்தது. அது இன்றைக்கு வந்து கொண்டுஇருக்கிறது. அது போதுமானதாக இல்லை. பயிர்கள் காய்கின்றன.. ஆகையால் இன்றைக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வைப்போம். இதுவரையில் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், போதுமான அளவு என்று சொல்ல முடியாது. எதோ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பராவயில்லை.. அவ்ளோதான்.. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் செல்வது அவர்களுக்கு இஷ்டம்.. அவர்களிடம் தண்ணீர் இல்லாமல் இருந்து நாம் கேட்கவில்லை. நம்மிடம்தான் தண்ணீர் இல்லை. கரநாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது. ஆனால், அதை தர மாட்டேன் என்று சொல்வது நியாயம் இல்லை.

இரண்டு வகையில் நியாயம் இல்லை. ஒரு ஆற்றின் போக்கில் கடைமடைக்குதான் முன்னுரிமை தர வேண்டும். அந்த இயற்கை நியதியையும் கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. நம்முடைய முதல்வர் அறிக்கை விடுகிறார். அதற்கும் செவி சாய்க்க மறுக்கிறார்கள். காவிரி ஒழுங்காற்று குழு கூறுவதையும் ஏற்க மாட்டோம் என்று அதற்காக மறியல் பண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் கர்நாடகாவில் வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான கர்நாடக மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். நித்தம் நித்தம் போக்குவரத்து இருக்கிறது. எனவே அண்டை மாநிலங்களாக இருக்கக் கூடிய இரு மாநிலங்களும் நட்பும் பாசத்தோடும் இருந்தால்தான் ஆங்காங்கே மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவர்களும் பயமின்றி வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.