தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்தில் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்திருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி மேல் சிகிச்சைக்காக ஐ.பெரியசாமி வழக்கமாகச் செல்லும் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமி அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.