பாலியல் கொடுமைகளை கேள்விப்படும்போது ரத்தம் கொதிக்கிறது: ரித்திகா சிங்

பெண்கள், இளம் வயது பெண்கள், குழந்தைகளை துன்புறுத்துவது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற செய்திகளை படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது என்று வலைத்தளத்தில் ரித்திகா சிங் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரித்திகா சிங் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமை சம்பவங்களை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் ரித்திகா சிங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பெண்கள், இளம் வயது பெண்கள், குழந்தைகளை துன்புறுத்துவது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற செய்திகளை படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. ஒவ்வொரு 2 மணிநேரத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கேள்விப்படும்போது பயமாக இருக்கிறது. நிறையபேர் இந்த கொடுமையை அனுபவித்துள்ளோம்.

பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யுங்கள். தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளுங்கள். தவறாக நடக்க முயற்சிப்பவர்களை நீங்கள் அடிப்பீர்கள் என்று அவர்கள் உணர வேண்டும். பெற்றோர் குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்கும்படி உருவாக்குங்கள். தற்காப்பு கலையை கற்க வையுங்கள். அரக்கர்களை கொண்ட உலகில் நாம் வாழ்கிறோம். நம்மையும் வருங்கால சந்ததியினரையும் பாதுகாப்பது நமது பொறுப்பு. காட்சிப்பொருளாக பெண்களை பார்க்கக்கூடாது என்று ஆண்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.