தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது; காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது என்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 3,000 கன அடிநீரை ஆகஸ்ட் 15-ந் தேதி வரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு வெளியான உடனே கர்நாடகா முதல்வர் சித்தராமையா தமது எக்ஸ் பக்கத்தில் திடுக்கிடும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் சித்தராமையா கூறியிருந்ததாவது:-
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண இவை அமைக்கப்பட்டுள்ளன. அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து இந்த அமைப்புகள் பிரச்சனைக்கு தீர்வு காணும். தமிழ்நாட்டின் பிலிகுண்டுலுவில் நீர் அளவு கணக்கிடப்படும். ஒரு ஆண்டுக்கு தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி நீர் கொடுக்கப்பட வேண்டும். எங்களுக்கு தேவையான நீர் 284.85 டிஎம்சி. ஆனால் நீர் பற்றாக்குறை காலத்தில் எப்படி பங்கீடு செய்ய வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமோ, காவிரி ஆணையமோ, ஒழுங்காற்று குழுவோ இதுவரை வரையறை செய்யவில்லை.
ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு நின்று போனதால் பிரச்சனை எழுந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதம் கூட கனமழை பெய்யும். தமிழ்நாட்டுக்கு பருவமழை கிடைக்கும். இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு இதுவரை 123 டிஎம்சி நீரைத் திறந்துவிட்டுள்ளோம். இன்னமும் 43 டிஎம்சி நீர்தான் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும். கர்நாடகா விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலைதான். குடிக்க கூட கர்நாடகாவில் நீர் இல்லை. ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகா அதிகாரிகள் இதனை எடுத்துச் சொல்லுகின்றனர். உச்சநீதிமன்றத்திலும் கர்நாடகாவுக்கு பாசனத்துக்காக 70 டிஎம்சி நீர் தேவை என மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். 30 டிஎம்சி நீர் குடிநீருக்கு தேவை எனவும் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளோம். கர்நாடகாவுக்கு இப்போதைய தேவை 106 டிஎம்சி எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
இன்று(நேற்று) மாலை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீர்வளத்துறை வல்லுநர்கள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்களுடன் காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீர்வளத்துறை வல்லுநர்கள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்களுடன் காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்பதால், மத்திய அரசால் கர்நாடகா அணைகளை கைப்பற்றி நீரை திறந்துவிட முடியுமா? நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா? மாநில அரசைக் கலைத்துவிட முடியுமா? உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் ஆலோசிக்க இருக்கிறோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வெங்கடாசலையா, சிவராஜ் பாட்டீல், கோபால் கவுடா, ரவீந்திரன், விஸ்வநாத் ஷெட்டி, வேணுகோபால் கவுடா, அட்வகேட் ஜெனரல் சசிகரன் ஷெட்டி, முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் பிவி ஆச்சார்யா, மதுசூதனன் நாயக், விஜயசங்கர், உதய் ஹொள்ளா, துணை முதல்வர் டிகே சிவகுமார், பேராசிரியர் ரவிவர்மா குமார் உள்ளிட்டோருடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.