அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமை கேட்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் இருந்து டெல்லி செல்லும் முன் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
டெல்லி பயணம் என்பது வழக்கமான ஒன்றுதான். என்னுடைய நடைபயணம் குறித்து, டெல்லியில் உள்ள தலைவர்களிடம் விளக்க உள்ளேன். நடைபயணத்தில் மூத்த தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். அவர்களின் தேதியை கேட்டுப்பெறவும் செல்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தியது பாஜக. அந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ளது. கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமை கேட்கவில்லை. ஒருவேளை கேட்டால், தக்க விளக்கம் அளிப்பேன். அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தால், அது பாஜகவுக்கு பின்னடைவு இல்லை. தற்போது தமிழகத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கி உள்ளது. பல இடங்களில் பாஜக வெற்றிபெறும். 2024 தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்தும். இளைஞர்கள் புரட்சிக்காக காத்திருக்கின்றனர்.
மாநிலத் தலைவர் பதவி என்பது, வெங்காயம் போன்றது. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. நான் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது. எனக்கென தனி உலகம் இருக்கிறது. அதில் வாழ்கின்றேன். ‘அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ்’ அண்ணாமலையிடம் கிடையாது. என்னால் யாருக்காகவும் மாற முடியாது. தமிழகத்தில் ஏதாவது ஒரு தேர்தலில் பாஜக 25 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டால், தமிழக அரசியல் தலைகீழாக மாறிவிடும். இந்தியாவில் பாஜக மட்டும்தான் சுத்தமான கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.