துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யார்லிகயா கூறுகையில், அக்.1ம் தேதி தனது அமைச்சக அலுவகம் அருகில் ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டார். துருக்கி தலைநகர் அங்கராவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப்படையினர் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் வாகன நிறுத்துமிடங்களில் ஆய்வு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.