ஆதிக் கயிலைவாசி இவர். உமையம்மையின் சேடியரை விரும்பியதால் மானுட அனுக்கிரஹம் பெற்றுப் பூமிக்கு வந்தவர்.
திருவாவலூரில் சடையனார் இசைஞானியார் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் எனும் சிற்றரசரின் செல்வராக – சுந்தரராக – வளர்ந்து வாலிபம் கண்டவர். இவரது திருமண நாளிலே, முதியவராக வந்த முக்கண்ணர், இவரைத் தடுத்து ஆட்கொண்டார். அப்போது சுந்தரர் பாடிய ” பித்தாபிறைசூடி ” எனும்பதிகம் உலகெங்கும் ஒலிப்பதாகும்.
துறையூரிலே சைவத்தவநெறி பெற்றார். தில்லையிலே ” திருத்தொண்டர் தொகை ” நெல்லுக்கும், பொன்னுக்கும் பாடி. செல்வம் குவித்துச் சிவனடியாற்குச் செலவிட்ட அழகுப் பிரியர் சுந்தரர். பரவை நாச்சியர், சங்கிலியர் என இருமனைவியரை மணந்தவர். பெண்ணழகிற்காகப் பொய்சத்தியம் செய்து, ஒரு கண்ணையிழந்து தெய்வத்தமிழ்ப் பதிகத் திறனால் ஈசனருளால், மீண்டும் விழிவரப் பெற்றவர். படைத்தவனாகிய ஸ்ரீ பரமேஸ்வரனையே காதலுக்குத் தூதனுப்பிய தமிழ்க் கொடை வள்ளல் இவர்.
அவினாசியிலே முதலையிடமிருந்து தமிழைப்பாடி மதலையை மீட்டவர். தலந்தோறும் வலம்வந்து மாந்தரின் இளமை நலம்வாழப் பாடி பக்தியை வளர்த்த சத்தியச் சைவர் ஸ்ரீ சுந்தரர்.
சேரமான் பெருமானுக்கு இவர் தந்த பொன் பொருளை சிவகணங்கள் பறிமுதல் செய்துவிட, திருமுருகன் பூண்டியிலே ” கொடுகுவெஞ்சிலை” ” வருகவேடுவா” எனும் பதிகம் பாடி இறையருளால் அனைத்துப் பொருளையும் மீட்டவர்.
சிற்றின்பச் சைவராய் வாழ்ந்து, பேரின்ப ஞானியாய் திருவஞ்சைக் களத்திலே … விண்ணிலிருந்து வந்த வெள்ளையானை மேல் ஏறி, மீண்டும் கயிலையைச் சேர்ந்தார் சுந்தர மூர்த்தி நாயனார்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
– சுந்தரர் தேவாரம்.