நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பரபரப்பான சூழலில், டெல்லி சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். சென்னையில் இன்று நடைபெறவிருந்த பாஜக கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான். அண்ணாதுரையை பற்றி அண்ணாமலை கூறிய கருத்தால் கொதித்தெழுந்த அதிமுக, தங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை தூக்கியெறிந்தது. தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்த போதிலும், அதனை பாதுகாக்க தவறிவிட்டதாக அண்ணாமலை மீது பாஜக மேலிடம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், அண்ணாமலையை பாஜக தலைமை நேரில் அழைத்தது. அதிமுக உடனான கூட்டணி முறிந்தது குறித்து விளக்கம் கேட்பதற்காகவே அவரை டெல்லி மேலிடம் அழைத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அண்ணாமலையோ, தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது என்பதை கூறுவதற்காகவே தான் டெல்லி செல்வதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜே.பி. நட்டாவையும், அமித் ஷாவையும் அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், அதற்கு பிறகும் அவர் டெல்லியில் இருந்து திரும்பவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. அண்ணாமலை கொடுத்த விளக்கத்தை ஜேபி நட்டாவும், அமித் ஷாவும் ஏற்கவில்லையோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த சூழலில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக சில மணிநேரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதுவும் பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான், டெல்லியில் நேற்று மாலை 6 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உடனான கூட்டணி முறிந்தது பற்றி இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெறவிருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழலில் நிர்மலா சீதாரமனுடன் அண்ணாமலை சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.