மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும். தேர்தல் நாடகம் என கூறுவது தவறானது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் நேற்று முன்தினம் திடீரென டெல்லிக்கு சென்றார். அங்கிருந்து நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் டெல்லி பயணம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பாக கட்சி சார்பில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்தந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்துதான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மனநிலையிலேயே இருக்கிறார். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் எதை சொல்கிறார்களோ அதை செய்து காட்டக்கூடியவர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஓதுக்கீடு மசோதா கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் மக்கள், நம் நாட்டில் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பராம்பரிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் காதி பொருட்களின் விற்பனை ரூ.33 ஆயிரம் கோடியில் இருந்து 9 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.