ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதி திராவிடர்களை கோவில் பூசாரிகளாக்கிவிடுவாரா?: திருமாவளவன்

100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதி திராவிடர்களை கோவில் பூசாரிகளாக்கிவிடுவாரா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம். இங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அங்கு 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என்.ரவி அவர்கள். இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன் பின்னர் நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமத்துக்கு சென்றார் ஆளுநர் ரவி. இதனிடையே சிதம்பரம் வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இடதுசாரிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி கைதாகினர். அப்போது சனாதனத்தை உயர்வாக பேசுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; பூணூல் விழா நடத்தாதே!! என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.