அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் தங்கள் கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் குறிவைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதே வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், இன்று காலை முதல் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா, “அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சஞ்சய் சிங் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார். அதன் காரணமாகவே தற்போது அவர் குறிவைக்கப்பட்டு, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்பு நடந்த சோதனைகளில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்றும் எதுவும் கிடைக்காது. அமலாக்கத்துறை நேற்று பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இன்று சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக சஞ்சய் சிங்கின் தந்தை தினேஷ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமலாக்கத்துறையினர் அவர்களின் வேலையை செய்கிறார்கள். அவர்கள் சரியாக எப்போது வந்தார்கள் என தெரியாது. ஆனால், காலை 7.30 மணி இருக்கும். அதுமுதல் சோதனை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவு வரை கூட நீங்கள் சோதனை நடத்திக்கொள்ளலாம் என நான் அவர்களிடம் கூறி இருக்கிறேன். அவர்கள் மீண்டும் மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அதிஷி, “மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அமலாக்கத்துறைக்கும் சிபிஐக்கும் நூற்றுக்கணக்கானவர்களை பணி அமர்த்தி உள்ளது. ஆனால், ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து பாஜக அஞ்சுவதையே இது காட்டுகிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோற்கப் போவதை பிரதமர் மோடி நன்கு அறிவார். அந்த அச்சம் காரணமாகவே ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகள், பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் மீதான அமலாக்கத் துறை சோதனை என்பது பாஜகவின் அவநம்பிக்கையையே காட்டுகிறது என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி கடந்த ஓராண்டாக அவர்கள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எதையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. சஞ்சய் சிங் வீட்டில் நடக்கும் சோதனையிலும் எதுவும் கிடைக்காது. ஒருவர் (பிரதமர் மோடி) தோல்வியை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் அவநம்பிக்கை கொள்கிறார். அவநம்பிக்கையான செயல்களையே நாடுகிறார். அதுதான் இப்போது நடக்கிறது.
தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற ரெய்டுகள் அதிகரிக்கும். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை, காவல் துறை என அனைத்து விசாரணை அமைப்புகளும் முடுக்கிவிடப்படும். நேற்று பத்திரிகையாளர்கள் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனை நடந்தது. இன்று சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடக்கிறது. இப்படி பல சோதனைகள் நடக்கும். அச்சம் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.